தமிழ் மொழிப் பயனர்களைப் புரிந்துகொள்ளுதல்

Written By: Jay

நம்முடைய தயாரிப்பை யார் பயன்படுத்துவார்கள்? நம்முடைய தகவலை யார் படிப்பார்கள்? நம் விளம்பரங்கள் யாரைச் சென்றடைய வேண்டும்? யார் நம் சேவையைப் பயன்படுத்துவார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் தான் எந்த ஒரு பொருளையும் சேவையையும் மொழியின் உதவியினால் கொண்டு செல்ல இயலும். வீட்டுத் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் மொபைலிலும் காட்டப்படும் விளம்பரங்களும் செய்திகளும் அறிவிப்புகளும் ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் இருந்தால் அவை எந்த அளவுக்கு மக்களைச் சென்றடையும் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? அல்லது இவ்வாறு யோசித்துப் பார்ப்போம், சங்ககால இலக்கிய நடையில் நாம் படிக்கும் சாதாரண கட்டுரைகளும் மற்ற பிற தகவல்களும் இருந்தால் நம்மில் எத்தனை பேருக்கு அவை புரியும்? ஒவ்வொரு மொழியும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. திருக்குறளையோ, சிலப்பதிகாரத்தையோ, சித்தர்கள் எழுதிய மருத்துவக் குறிப்புகளையோ தற்காலத்தில் புரிந்துகொள்ள முடியாமல் அதைப் புரிந்துகொண்ட ஆசிரியர்களிடம் சென்று கற்றுக்கொள்வதற்கான காரணம் மக்களுடைய அன்றாடப் பேச்சுவழக்கிலும் எழுத்துநடையிலும் அவை இல்லாதது தான். அவ்வகையில் வேற்றுமொழியில் ஒரு தகவலைப் பரிமாறுவதற்கும் தாய்மொழியில் பகிர்வதற்கும் வேறுபாடு மிக அதிகமாகவே உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இணையத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் அவருக்கு கட்டாயம் ஆங்கில மொழித்திறன் இருக்க வேண்டும் என்பதோடு அவருடைய கருத்துகளையும் அவர் ஆங்கில மொழியின் வழியாகத்தான் தெரிவித்தாக வேண்டும் என்கிற நிலை இருந்தது. அதன் காரணமாக 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருந்த இந்தியாவில் நேரடியாக இணையத்தைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமான அளவிலேயே இருந்து வந்தது. 

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி இணையத்தை ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தங்கள் தாய்மொழியில் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய விகிதத்தில் வளர்ந்து வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 3% வளர்ச்சி அடையும் நிலையில் தாய்மொழியில் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 18% அளவுக்கும் மேலாக வளர்ந்து வருகின்றனர் என்கிறது அந்தக் கருத்துக்கணிப்பு. தாய்மொழியில் எளிதாகப் புரிந்துகொள்ளும் திறன், தான் வளர்ந்த சூழலோடு கொண்டுள்ள நெருக்கம், வேற்று மொழிகளை அறியாமை, மொழிப்பற்று என இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நம் மொழியில் இணையதளத்தையும் பல்வேறு மென்பொருட்களையும் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டால் தான் நாம் அவர்களுக்குச் சிறந்த  சேவையை அளிக்க இயலும். தமிழ் மொழியில் மென்பொருட்களைப் பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்தவரையில் பெரிதளவில் கீழ்காணும் பிரிவுகளுக்குள் வருவார்கள்.

மொழி ஆர்வலர்கள்: 

ஆங்கிலம் நன்கு தெரிந்தாலும் கூட இவர்கள் கூடுமானவரை எல்லா மென்பொருட்களையும் தாய்மொழியிலேயே பயன்படுத்த விரும்புவார்கள். இத்தகைய வாடிக்கையாளர்களுக்குத் தமிழைச் சரியாகவும், கலப்படம் இல்லாமல் தூய்மையானதாகவும் பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும். காபி, டீ, சைக்கிள், பஸ் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களையும் கூட அவர்கள் குளம்பி, தேனீர், மிதிவண்டி, பேருந்து என்று கூறவே விரும்புவார்கள். தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள தீராத பற்றுதலின் காரணமாக சிறு தவறையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் ஆர்வலர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களில் தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்துவது உகந்ததாக இருக்கும். அரசியல்வாதிகள், மேடைப்பேச்சாளர்கள், தமிழ் முனைவர்கள், தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்கள், தமிழ் ஆசிரியர்கள், பேராசியர்கள் உள்ளிட்டவர்கள் இந்தப் பட்டியலின் கீழ் வரக்கூடியவர்கள். கம்ப்யூட்டர் – கணினி, மவுஸ்-சுட்டி, கீபோர்டு – விசைப்பலகை என்பது போன்ற பல்வேறு ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான அறிவியல் கலைச்சொற்கள் உருவானதற்கு இப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களின் பங்கு பிரமிப்பூட்டும் வகையில் இருந்துள்ளது. தன் பொருட்களையும் சேவைகளையும் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் கொண்டுள்ள எந்தவொரு வணிக நிறுவனமும் ஆர்வலர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தனது பொருட்களை பிராந்திய மொழியில் விற்பனை செய்ய இயலாது. 

தொழில் வல்லுநர்கள்:

சட்டரீதியான ஆவணங்களையோ, மருத்துவ ஆவணங்களையோ அல்லது மென்பொருள் சார்ந்த ஆவணங்களையோ மொழிபெயர்க்கும் போது அந்தத் துறை சார்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அதைப் பயன்படுத்தும் தொழில் வல்லுநர்கள் எதிர்பார்ப்பார்கள். உதாரணமாக, கிரயப் பத்திரம், தகவல் அளிக்கப்பட்ட ஒப்புதல் படிவம்,  மொபைல் மென்பொருளுக்கான புரோகிராம் உள்ளிட்டவற்றுக்கு அந்தத் துறைசார்ந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் தான் சீராகவும் துறைசார்ந்த வல்லுநர்களால் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் குறிப்பிட்ட முறைசார்ந்த மொழி நடையையே கொண்டு இருக்கும். மேலே தலைப்பு, வழக்கு எண், வரிசை எண், சாட்சிகளின் கையொப்பம், நடுவே இவற்றையெல்லாம் விளக்கும் பத்திகள் என்று இவர்கள் பயன்படுத்தும் ஆவணங்கள் குறிப்பிட்ட முறையைப் பின்பற்றக்கூடியவை. அதிலிருந்து விலகாமல் அந்தந்தத் தொழிற்துறைக்கு ஏற்ற சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம். உதாரணமாக, சஸ்பென்ஷன் என்கிற ஆங்கில வார்த்தை சட்டரீதியாகப் பயன்படுத்தப்படும் போது பணி இடைநீக்கம் என்றும் மருந்து தொடர்பான சூழலில் சஸ்பென்ஷன் என்கிற வகையான வேதிப்பொருளாகவும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஒரு மருந்தை இடைநீக்கம் என்று மொழிபெயர்ப்போமானால் அது நிச்சயம் தவறானதாகவே இருக்கும். செட் என்கிற ஆங்கில வார்த்தைக்கும் மட்டும் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் 500 அர்த்தங்கள் உள்ளன. ஆகவே, அவற்றை எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துகிறோம் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம். 

நகர்ப்புற சாமானிய மக்கள்:

நகர்ப்புறத்தில் வாழும் சாமானிய மக்களுக்கு பட்டயப் படிப்பு, சாரங்கட்டுதல், தானியங்கி, விசைப்பலகை போன்ற தூய தமிழ் சொற்கள் பழக்கத்தில் இருக்காது. அதேபோல, இதில் பாதி பேருக்கு முற்றும் முழுவதுமாக ஆங்கிலத்திலேயே பயன்படுத்தக்கூடிய சின்க், டெத்தரிங், ஃப்ரீக்குவென்சி மாடுலேஷன் போன்ற வார்த்தைகளும் புரியாமல் இருக்கலாம்.  பெரும்பாலான விளம்பர நிறுவனங்களும் மென்பொருட்களும் இவர்களைச் சார்ந்தே பிராந்திய மொழிகளில் தங்கள் விளம்பரங்களையும், செய்திகளையும், அறிவிப்புகளையும், மென்பொருட்களையும் வெளியிடுகின்றன. இத்தகைய மக்கள் தங்கள் பேச்சு வழக்கோடு நெருங்கிய சொற்களைப் பயன்படுத்த விரும்புவார்கள். சைக்கிள், பஸ், மொபைல், லேப்டாப் போன்ற பிற மொழி வார்த்தைகளை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். அதே சமயம் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதினாலும் இவர்களுக்கு அதில் சிரமம் ஏற்படலாம். இவர்களுக்கான மொழி அறிவைப் புரிந்துகொண்டால் பல்வேறு தயாரிப்புகளையும் சேவைகளையும் குறிப்பிட்ட பிராந்தியங்களில் எளிதாகக் கொண்டுசென்றுவிடலாம். தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த தயாரிப்புகளும் குரல் தேடல்களும் இவர்களுடைய பேச்சு வழக்குகளையே கருத்தில்கொண்டு உருவாக்கப்படுகின்றன. ஏனென்றால், வாங்கும் சக்தி இவர்களுக்கு அதிகம் உள்ளது. இவர்களுக்கான தயாரிப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். ஆனால், மிகவும் தூய தமிழில் பேசும்போது சில வார்த்தைகளை இவர்களால் புரிந்துகொள்ள இயலாது. தமிழ் வழியில் படிப்போருக்கு நன்கு தெரிந்த சில வார்த்தைகளும் இவர்களைத் திணறடிக்கலாம். அந்த விதத்தில் சற்றே கவனமாக இருப்பது அவசியம். 

கிராமப்புற சாமானிய மக்கள்: 

கிராமப்புறத்தில் வாழும் சாமானிய மனிதர்களுக்கு ஜியோ லொகேஷன், வைப்ரேட் மோடு, டிஸ்ப்ளே, வாட்ச், சப்மிட் போன்ற சாதாரண ஆங்கில வார்த்தைகளும் கூட புரிந்துகொள்ள இயலாதவையாக இருக்கலாம். அதேசமயம் லப்பம் பார்த்தல், பட்டயப்படிப்பு போன்ற வார்த்தைகள் எளிதில் புரியக்கூடியதாகவும் இலகுவாக்குதல், வணிகம் போன்ற வார்த்தைகள் புரிந்துகொள்ள சிரமமானதாகவும் இருக்கலாம். இந்தியாவில் நகரங்களை விட கிராமங்களே அதிகமாக உள்ளன. எனவே நகர்ப்புற மக்களுக்கு ஏற்ற பல்வேறு தயாரிப்புகள் வெளிவந்தாலும் ஒரு வணிக நிறுவனம் கிராமப்புற மக்களிடமும் தன் தயாரிப்புகளை முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பது உறுதி. அப்படி இல்லாவிட்டால் பல கோடி மக்களிடம் அவர்களுடைய தயாரிப்புகளும் சேவைகளும் சென்றடையாமல் போய்விடுவதோடு அதில் கிடைக்கும் வருமானத்தையும் இழப்பது உறுதியாகிவிடும். ஆகையால், இவர்களுடைய புரிதலுக்கு ஏற்ப மொழியைக் கொண்டு செல்வதே விளம்பரதாரர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தற்போதுள்ள சவால். அதிகப்படியான ஆங்கிலமும், தூய தனித்தமிழும் இவர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கும். இவர்களைச் சென்றடைய வேண்டும் என்றால் புத்தகத் தமிழை விட எளிதாகவும், கார்ப்பரேட் ஆங்கிலத்தில் இருந்து வெகு தொலைவிலும் சிந்தித்து அவர்களுக்கான விளம்பரங்களையும் விவரிப்புகளையும் உருவாக்க வேண்டும். 

நாம் யாரிடம் பேசுகிறோம் என்பதைப் புரிந்துகொண்டால் எப்படிப் பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது எளிதாகிவிடும். குழந்தைகளிடம் கொஞ்சிப்பேசுவோம், முதியோரிடம் மெல்லப் பேசுவோம், நண்பரிடம் நட்பாய் பேசுவோம், சக பணியாளரிடம் பரஸ்பர மரியாதையுடன் பேசுவோம், வெளிநாட்டவரிடம் அவர் மொழியில் பேசுவோம். நமக்கு என்ன தெரியும் என்பதல்ல பிறர் என்ன புரிந்துகொள்வார்கள் என்பதை உணர்ந்து நம் மொழியைப் பயன்படுத்துவது மொழி சார்ந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்றியமையாத திறன் ஆகும். 

    Leave a Reply

    Your email address will not be published.